சல்லடைக்குழாய் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை: சல்லடைக்குழாய்; பச்சை சிறுகோடு: சல்லடைத்தட்டு; இளஞ்சிவப்பு: துணைச்செல்; அடர் இளஞ்சிவப்பு: உட்கரு; மஞ்சள்: ஊட்டச்சத்துக்கள்
பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்:
1. தக்கை (Pith),
2. மூலக்காழ் (Protoxylem),
3. காழ் (Xylem) I,
4. உரியம் (Phloem) I,
5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma),
6. மேற்பட்டை (Cortex),
7. மேற்றோல் (Epidermis)

சல்லடைக்குழாய் அல்லது நெய்யரிக்குழாய் என்பது, உரியத் தொகுப்பை உருவாக்கும், உள் உயிரணுக்களில் ஒன்றாகும். உரியப்பாரன்கைமா, உரியநார்கள் என்பன பிற உட்கூறுகள் ஆகும். கலன்றாவரங்களில் சுக்குறோசு முதலான ஊட்டச்சத்துக்களைக், ஒரு தாவரத்தின் வேண்டும் பகுதிகளுக்கு மேலேயோ அல்லது கீழேயோ கொண்டுசெல்ல இவைகள் உதவுகின்றன.[1]

கட்டமைப்பு[தொகு]

சல்லடைக்குழாய் தடித்த முதலாம் உயிரணுச் சுவரைக் கொண்டுள்ளன. இவற்றின் முனைச்சுவர்கள் கிடைமட்டமாகவோ அல்லது சாய்வாகவோ காணப்படும். இந்த முனைச்சுவர்களில், சல்லடையில் உள்ளது போன்ற துளைகள் உள்ளன. எனவே இவை சல்லடைத்தட்டுகள் (Sieve plates) எனப்படுகின்றன. சல்லடைக்குழாய் கூறுகளின் முனைப்பகுதிகளில், ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்து சல்லடைக்குழாய்கள் செங்குத்தாக உள்ளன. முதிர்ந்த சல்லடைக் குழாயில் ̈உட்கரு, சாற்றுக்குமிழி, இரைபோசோம் போன்ற உயிரணு உட்கூறுகள் காணப்படவில்லை. இதில் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம்(cytoplasm) மட்டும் உள்ளது. இது சல்லடைக்குழாயின் சிறப்புப் பண்பாகும். 'ஸ்லைம்' உடலம் என்ற சிறப்பு வகைப் புரதம் காணப்படுகிறது. சைட்டோபிளாச இழைகளின் மூலம் உணவுப்பொருட்கள் ஒரு சல்லடைக் குழாயிலிருந்து அடுத்துள்ள சல்லடைகுழாய்க்கு கடத்தப்படுகின்றன.

சல்லடைக்குழாய் கூறுகளானது, சல்லடைஉயிரணுகள் மற்றும் சல்லடைக்குழாய்கள் என இருவகையாக வேறுபட்டுள்ளது. தெரிடோஃபைட்டு (Pteridophyta) களிலும், வித்துமூடியிலிகளிலும் சல்லடைஉயிரணுகள் காணப்படுகின்றன. பூக்கும் தாவரங்களில் சல்லடைக் குழாய்கள் காணப்படுகின்றன. சல்லடைஉயிரணுவில், சல்லடை பரம்பு, பக்க சுவர்களில் மட்டுமே காணப்படும். இவ்வுயிரணுகள் ஒன்றின் நுனியின் மீது ஒன்றாக செங்குத்து வரிசையில் அமைந்திருக்கவில்லை.

மேலும் சல்லடை உயிரணுகள், துணை உயிரணுகளுடன் சேர்ந்து காணப்படுவதில்லை. ஆனால், சல்லடைக்குழாய்கள் ஒன்றின் நுனியின் மீது ஒன்றாக அமைந்து செங்குத்து வரிசையில் காணப்படுகின்றன. இவற்றில் சல்லடைத்தட்டுகள், முனைச் சுவர்களில் காணப்படுகின்றன. மேலும் இவை துணை உயிரணுகளுடன் சேர்ந்து காணப்படுகின்றன. முதிர்ந்த சல்லடைக்குழாய் கூறுகளில். சல்லடைத் தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் என்னும் பொருளினால் அடைக்கப்படுகின்றன.

துணைஉயிரணுக்கள்[தொகு]

துணைஉயிரணுக்கள்(Companion cells) என்பது சல்லடைக்குழாய் கூறுகளோடு சேர்ந்து காணப்படுகின்ற. மெல்லிய உயிரணுச்சுவர் கொண்ட, நீண்ட, சிறப்பான பாரன்கைமா உயிரணுக்கள், துணை உயிரணுக்கள் எனப்படும்.[2]] சல்லடைக்குழாய் கூறுகள் போல இல்லாமல், இந்த துணைஉயிரணுக்களினுள், தெளிவான உட்கரு காணப்படுகிறது. சல்லடைக்குழாயின் பக்கவாட்டு சுவரில் உள்ள குழிகள் மூலம், இத்துணைசெல்கள் சல்லடைக் குழாயுடன் தொடர்பு கொண்டுள்ளன. உணவுப்பொருட்களை கடத்துவதில் சல்லடைக்குழாய்களுக்கு, இவை துணை புரிகின்றன. இ்ந்த துணைஉயிரணுக்கள், பூக்கும் தாவரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், தெரிடோஃபைட்டுகளிலும், வித்துமூடியிலிகளிலும் காணப்படுவதில்லை.

இக்கட்டுரைகளையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72
  2. Winterborne J, 2005. Hydroponics - Indoor Horticulture

மேலும், விவரங்கள்[தொகு]

  • Katherine Esau (1969). The Phloem -in: Encyclopedia of Plant Anatomy. Gebrüder Borntraeger, Berlin, Stuttgart.
  • Campbell, N. A. (1996) Biology (4th edition). Benjamin Cummings NY. ISBN 0-8053-1957-3
  • Hartig, T. (1837) Vergleichende Untersuchungen über die Organisation des Stammes der einheimischen Waldbäume. Jahresber. Fortschr. Forstwiss. Forstl. Naturkd. 1:125-168