கிறித்தவக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மாவு ஊரில் இயேசு சீடரோடு உணவு அருந்துதல். ஓவியர்: கரவாஜியோ. ஆண்டு: 1601. துணிமேல் எண்ணெய் பாணி. அளவு: 139 x 195 செ.மீ. காப்பிடம்: தேசிய கலைக்கூடம், இலண்டன்.

கிறித்தவக் கலை (Christian art) என்பது கிறித்தவ சமயக் கருத்துகளைப் புலன்களுக்கு எட்டும் வகையில் கலைப் பாணியாக வடித்து அளிப்பதைக் குறிக்கும்.

பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் கலை வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளன. சில குழுக்கள் கலை வெளிப்பாடுகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளன. கிறித்தவ வரலாற்றில் சில வேளைகளில் கிறித்தவக் கலைப் படைப்புகளை அழிக்கும் முயற்சியும் நிகழ்ந்ததுண்டு (iconoclasm).

கிறித்தவக் கலை சித்தரிப்பவை[தொகு]

கிறித்தவக் கலை இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகப் பரவலாக சித்தரித்து வந்துள்ளது. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளும் கலை வடிவம் பெறுவதுண்டு. குறிப்பாக, இயேசுவின் அன்னை மரியாவை சித்தரிக்கும் கலைப் படைப்புகளும் புனிதர்களை சித்தரிக்கும் கலைப் படைப்புகளும் புரட்டஸ்தாந்தத்தில் குறைவு. மாறாக, கத்தோலிக்கம் மற்றும் மரபுவழி திருச்சபைகளில் அத்தகைய கலைப் படைப்புகள் நிரம்ப உண்டு.

ஆபிரகாமிய சமயங்களில் கலை[தொகு]

ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற மதங்களாகிய கிறித்தவம், யூதம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுள் கிறித்தவம் மட்டுமே சமயம் தொடர்பான கலை வடிவங்களை ஆதரித்து, ஏற்று வந்துள்ளது. யூதமும் இசுலாமும் சமயம் தொடர்பான உருவங்களை சித்திர மற்றும் சிலை வெளிப்பாடுகளாகப் படைப்பதை ஆதரிப்பதில்லை.

வரலாறு[தொகு]

தொடக்க காலம்[தொகு]

அன்னை மரியாவும் இயேசு குழந்தையும். கி.பி. நான்காம் நூற்றாண்டு சுவர் ஓவியம். காப்பிடம்: உரோமை நகர சுரங்கக் கல்லறைகள்

கிறித்தவத்தின் தொடக்க காலக் கலை அதன் ஆரம்பத்திலிருந்தே வடிவம் பெற்றது. கி.பி. சுமார் 70ஆம் ஆண்டிலேயே கிறித்தவக் கலை தொடங்கிவிட்டிருந்தது. மெகிதோ (Megiddo) எனவும் அருமகதோன் (Armaggeddon) எனவும் அழைக்கப்படுகின்ற இடத்தில் (இன்றைய இசுரயேல் நாட்டில்) நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சுவரோவியங்கள் கி.பி. சுமார் 70ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அதுபோலவே கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வடிக்கப்பட்ட கிறித்தவக் கல்லறைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

உரோமை நகரில் பண்டைக் கால கிறித்தவ கல்லறைச் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்ட சித்திரங்கள் பல உள்ளன. அவற்றை ஆய்ந்து பார்க்கும்போது இயேசுவை அச்சித்திரங்கள் உருவமைக்கும் முறை ஒரு பரிணாம வளர்ச்சியைப் பெற்றது தெரிகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நெகிழ்ச்சி காணப்படுகிறது. அதன் பிறகு உருவான கிறித்தவக் கலையில் இயேசுவின் உருவம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட முகத்தோற்றத்தையே கொண்டுள்ளது.

பெரிய கான்ஸ்டன்டைன் பேரரசன் காலத்தில் (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) கிறித்தவக் கலை சமகால உரோமை கலைப் பாணியிலிருந்து பல கூறுகளைத் தன்வயமாக்கியது. கிறித்தவர்கள் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்னும் நிலை உருவானதைத் தொடர்ந்து, பேரரசனின் ஆதரவின் கீழ் பல பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. அக்கோவில்களில் கிறித்தவக் கலை உரோமைக் கலைப் பாணியைப் பின்பற்றி வளரலாயிற்று. குறிப்பாக உரோமைக் கலைப் பாணியாகிய கற்பதிகை ஓவியங்கள் (mosaics) படைக்கப்பட்டன.

செவ்விய கலைப் பாணி சிறிது சிறிதாக மாற்றம் பெற்ற நிலையில் கிறித்தவக் கலையும் மாற்றம் பெற்றது. மண்ணகப் பார்வை அதிகமாக விண்ணகப் பார்வை ஆனது. அதிலிருந்து நடுக்கால கலைப் பாணி தோன்றலாயிற்று.

நடுக்காலம்[தொகு]

இயேசுவின் இறுதி இராவுணவு. ஓவியர்: லியொனார்டோ டா வின்சி. ஆண்டு கி.பி. 1498

கி.பி. 476இல் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியுற்றது. அக்காலத்திய ஐரோப்பிய கலைப் படைப்புகளுள் கிறித்தவம் சார்ந்த கலைப் படைப்புகளே பெரும்பாலும் எஞ்சின. அதற்கு திருச்சபை அளித்த பாதுகாப்பும் ஆதரவும் முக்கிய காரணங்களாகும்.

கீழை உரோமைப் பேரரசுப் பகுதிகளில் மரபுவழி திருச்சபை பல கிறித்தவக் கலைப் படைப்புகளுக்கு ஆதரவு நல்கியது. பிசான்சியப் பேரரசின் ஆதரவோடு கிறித்தவ பிசான்சியக் கலை வளர்ந்தது. கிரேக்க கலைப் பாணி மனித உருவத்தை இயல்பான விதத்தில் சித்தரித்த முறை படிப்படியாக மாற்றமுற்றது. பிசான்சிய கிறித்தவக் கலைப் பாணியில் மனித உருவம் சமயம் சார்ந்த பொருளைக் குறிக்கும் விதத்தில் மாற்றமடைந்தது. இயல்பான நிறம், ஒளி, அணுகுப் பார்வை போன்றவற்றிலும் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இவ்வாறு கிறித்தவக் கலை தரப்படுத்தப்பட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப எளிமையாக்கப்பட்டு, இயேசு, அன்னை மரியா போன்றவர்களைச் சித்தரிக்கலாயிற்று.

கி.பி. 8-9 நூற்றாண்டுகளில் பிசான்சியப் பேரரசில் பல கிறித்தவக் கலைப் படைப்புகள் அழிக்கப்பட்டன (iconoclasm).

கிரேக்க கலைப் பாணியில் இயல்பான சித்தரிப்பு முறை இருந்தது. ஆனால் பிசான்சியப் பேரரசு காலத்தில் கிறித்தவக் கலை அதிகமாக கருத்துரு வகையில் அமையலாயிற்று. இப்பாணி கலை அம்சத்தை வலியுறுத்துவதைவிட சமய உணர்வை எழுப்பும் வகையில் அமைந்தது. எனவே நபர்களையும் பொருள்களையும் இயல்பான முறையில் சித்தரிப்பதைவிட உள்ளத்தில் பக்தியைத் தூண்டுவதே அக்கலைப் பாணியின் குறிக்கோளாக இருந்தது. நிறம், ஒளி, அளவுக் கூறுகள், இயல்புப் போக்கு ஆகியவற்றிற்கு முதன்மை தரப்படவில்லை; மாறாக அளவுமுறை எளிமையாக்கப்பட்டு, நபர்களையும் நிகழ்வுகளையும் தரப்படுத்தி கலை உருவானது.

விவிலியத்தில் தரப்படுகின்ற பத்துக் கட்டளைகளில் கடவுளுக்கு உருவமோ சித்திரமோ ஆக்கி வழிபடல் தவறு என்று உள்ளது. விடுதலைப் பயணம் 20:4:

"மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்".

இதன் அடிப்படையில் கிறித்தவக் கலைப் பொருள்களை அழிக்க வேண்டும் என்று சிலர் வாதாடினர். கி.பி. 8-9 நூற்றாண்டுகளில் இத்தகைய அழிவுச் செயல்கள் நிகழ்ந்ததால் பல கிறித்தவக் கலைப்பொருள்கள் சிதைவுற்று மடிந்துபோயின.

மறுமலர்ச்சி மற்றும் நவீன காலத் தொடக்கம்[தொகு]

1453ஆம் ஆண்டில் உரோமை கீழைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் இசுலாமிய ஓட்டோமான் படையெடுப்பின் காரணமாக வீழ்ச்சியுற்றது (கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி). அப்படையெடுப்பின்போது அரிய மதிப்பு வாய்ந்த கிறித்தவக் கலைப் பொருள்கள் அழிக்கப்பட்டு இடம் தெரியாமல் மறைந்துபோயின.

எனினும் திருவோவியம் படைத்தல் என்னும் கலை உருவாக்கம் தொடர்ந்தது. இந்தக் கலை வடிவத்திற்கு முழுமூச்சான ஒத்துழைப்புக் கொடுத்தது கீழைத் திருச்சபையே என்றால் மிகையாகாது. திருவோவியம் படைக்கின்ற செயல்பாடு இன்று வரை இடையூடின்றி நிலைத்துள்ளது. பிசான்சிய திருவோவியக் கலை உருசியா நாட்டில் பெரிதும் வளர்ச்சி பெற்றது.

மேற்கு உரோமைப் பேரரசுப் பகுதியில் திருச்சபை அதிகாரிகளும் பிரபுக்களும் அளித்த ஆதரவினால் கிறித்தவக் கலை வளர்ந்தது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது சமயச் சார்பற்ற கலையும் செழித்தோங்கியது. இந்நிலை புரட்டஸ்தாந்து சீர்திருத்தக் காலம் வரை நீடித்தது. இச்சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக, கிறித்தவ கலைக்கு எதிர்ப்பு தோன்றியது. பல கலைப் பொருள்கள் அழிந்துபட்டன. இது குறிப்பாக புரட்டஸ்தாந்து சபைகளைத் தழுவிய ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தது.

மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் கிரேக்க-உரோமைய செவ்விய காலக் கலை புத்துயிர் பெற்றது. ஆள்களின் உருவச் சித்திரங்கள் ஆக்குதல், நிலப் பரப்பைச் சித்தரித்தல் போன்ற முயற்சிகள் நிகழ்ந்தன. ஐரோப்பாவின் கத்தோலிக்க நாடுகளில் கிறித்தவக் கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. கத்தோலிக்க சீர்திருத்தம் 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தபோது கிறித்தவக் கலையும் வளர்ந்தது. எனினும் திருச்சபையின் கட்டுப்பாடு அதிகரித்தது.

18ஆம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவக் கலையாக்கத்தில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் தனிப்பட்ட முறையில் புரவலர்கள் பலர் கிறித்தவக் கலையை ஆதரித்தனர்.

நவீன காலம்[தொகு]

19ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் சமயம் சேராத, பொதுவான கலைப்பாணி உருவானது. அப்போது பண்டைக்கால மற்றும் நடுக்கால கிறித்தவ கலைப் பொருள்கள் கலையழகு முன்னிட்டு சேகரிக்கப்பட்டன. அக்கலைப் பொருள்கள் வழிபாட்டுத் தேவைகளுக்கென அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை.

ஓரோவேளைகளில் சமயம் சாராக் கலைஞர்கள் கிறித்தவப் பொருள்களைக் கலைப் பொருள்களாகப் படைத்தார்கள். அவ்வரிசையில் பூகெரோ (Bouguereau), எடுவார்ட் மனே (Manet) போன்றோர் குறிப்பிடத்தக்கோர். ஜோர்ஜ் ரூஓ, (Georges Rouault) ஸ்டான்லி ஸ்பென்சர் (Stanley Spencer)போன்ற ஒரு சிலர் மட்டுமே சிறப்பான கலைஞர் பட்டியலில் அரிதாக இடம் பெற்றனர்.

ஆயினும், ஏரிக் ஜில் (Eric Gill), மார்க் ஷாகால் (Marc Chagall), ஹென்றி மத்தீஸ் (Henri Matisse), யாக்கோப் எப்ஸ்டைன் (Jacob Epstein), எலிசபெத் ஃப்ரிங் (Elizabeth Frink), கிரகாம் சுதர்லாந்து (Graham Sutherland) போன்ற சிறப்பான கலைஞர்கள் கிறித்தவ சமயம் தொடர்பான கலைப்பொருள்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள்.[1]

பொதுமக்கள் பக்திக் கலை[தொகு]

1450இல் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கிறித்தவக் கலை பொதுமக்களிடையே விரைவாகப் பரவியது. மிகாலி முன்காசி (Mihály Munkácsy) போன்ற கலைஞர்களின் படைப்புகளும் இவண் அடங்கும்.

1796ஆம் நூற்றாண்டில் கல்லச்சுக்கலை (lithography) கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கிறித்தவக் கலைப் பொருள்கள் சிறு படங்கள் வடிவில் பெருமளவில் அச்சிடப்பட்டு மக்களிடையே பரவின.

நவீன காலத்தில், ஒரு சில நிறுவனங்கள் தாமசு ப்ளாக்‌ஷீர் (Thomas Blackshear), தாமசு கின்கேட் (Thomas Kinkade) போன்றோரின் கலைப்படைப்புகளை மக்களிடையே பரப்பின.[2]இத்தகைய படைப்புகள் புகழ்பெற்றவையாக மாறின.

கிறித்தவ நுண்கலையின் மீள்பிறப்பு[தொகு]

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு சில கிறித்தவக் கலைஞர்கள் கடவுள், இயேசு கிறித்து, திருச்சபை, விவிலியம் போன்ற கிறித்தவக் கருப்பொருள்களைக் கலையாக வடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள். கிறித்தவ மனிதமேம்பாட்டுக் கொள்கையின் ஒரு மீள்பிறப்பாக இதைச் சிலர் கருதுகிறார்கள். அவர்களுள் கிரகோரி வோல்ஃப் (Gregory Wolfe) என்பவரும் உள்ளடங்குவார்.[3]

மேலும், மக்கோட்டோ ஃபுஜிமூரா (Makoto Fujimura) போன்ற கலைஞர்கள் கிறித்தவக் கலை மற்றும் சமயம் சாராக் கலை ஆகிவை தொடர்பான கலைப் பொருள்களை உருவாக்கிச் சிறப்புச் சேர்த்துள்ளார்கள். அவ்வரிசையில் லேரி டி. அலெக்சாந்தர் (Larry D. Alexander), ஜான் ஆகஸ்ட் ஸ்வான்சன் (John August Swanson) ஆகியோரையும் சேர்க்கலாம்.

நடுக்காலத்தில் மரபுவழி திருச்சபை கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட புனிதர் சிலை. காப்பிடம்: உருசியா

கிறித்தவக் கலையின் கருப்பொருள்கள்[தொகு]

கிறித்தவக் கலையின் கருப்பொருள்கள் பலவுள. அவற்றுள் இயேசு மற்றும் அன்னை மரியா தொடர்பான பொருள்கள் சிறப்பு மிக்கன. இதோ கிறித்தவக் கலையின் கருப்பொருள்களுள் சில:

  • கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை வணங்கல்
  • இடையர்கள் இயேசுவை வணங்கல்
  • வானதூதர்
  • இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
  • இயேசு கைதுசெய்யப்படல்
  • இயேசுவின் விண்ணேற்றம்
  • மரியாவின் விண்ணேற்பு
  • இயேசுவின் திருமுழுக்கு
  • மாட்சிமையில் இயேசு
  • அன்னை மரியா முடிசூட்டப்பெறல்
  • இயேசுவின் சிலுவைச் சாவு
  • இயேசு சிலுவையினின்று இறக்கப்படுதல்
  • திருக்குடும்பம்

குறிப்புகள்[தொகு]

  1. Beth Williamson, Christian Art: A Very Short Introduction, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (2004), page 110.
  2. Cynthia A. Freeland, But Is It Art?: An Introduction to Art Theory, Oxford University Press (2001), page 95
  3. Wolfe, Gregory (2011). Beauty Will Save the World: Recovering the Human in an Ideological Age. Intercollegiate Studies Institute. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-933859-88-0. http://www.amazon.com/Beauty-Will-Save-World-Ideological/dp/1933859881. 

ஆதாரங்கள்[தொகு]

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவக்_கலை&oldid=3700257" இலிருந்து மீள்விக்கப்பட்டது