புதைகுழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sinkhole in Ein Gedi

புதைகுழி அல்லது சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம் (sinkhole) என்பது இயற்கையிலேயே நிலத்தின் மேற்பரப்பில் தோன்றும் இறக்கம் அல்லது குழியாகும். இது கார்சுடு செயல்பாட்டினால் (karst process) ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, புவியின் அடியில் உள்ள சுண்ணாம்புக்கல் போன்ற கார்பனேட் பாறை அடுக்குகள் கரைவதனால் இப்புதைகுழிகள் ஏற்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் இக்குழிகள் காணப்படுகின்றன, மேலும் இவை 1 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை அகலத்திலும் ஆழத்திலும் மாறுபடுகின்றன. இவை அடிநிலப்பாறையை பக்கங்களாகக் கொண்ட அகன்ற குழிகளாகவும் மற்றும் மணலை விளிம்புகளில் கொண்ட சிறு குழிகளாகவும் அமைந்துள்ளன. இவை திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ உருவாகலாம். உலகின் பல இடங்களில் பல்வேறு பெயர்கள் கொண்டு இக்குழிகளைக் குறிக்கின்றனர்.

புதைகுழிகளின் உருவாக்கம்[தொகு]

இவை புவியின் மேற்பரப்பில் உள்ள நதிகள் அல்லது மற்ற நீர்நிலைகளில் தோன்றலாம். சாதாரண உலர்ந்த புவிமேற்பரப்புகளிலும் தோன்றலாம்.

பொதுவாக இக்குழிகள் அடிநிலப்பாறை அரிக்கப்படுவதால் உருவாகிறது. புவிமேற்பரப்பிலிருந்து ஊருகின்ற நீர் அடியில் சென்று அங்குள்ள சுண்ணாம்புக்கல் போன்ற எளிதில் கரையக் கூடிய அடிநிலப்பாறைகளைக் கரைக்கிறது. இவ்வடிநிலப்பாறைகள் கரைவதனால் குகை போன்ற இடைவெளி நிலத்தின் கீழடுக்குகளில் உருவாகும். இந்த இடைவெளி படிப்படியாக வளர்ந்து பெரிதாகிறது. இந்த இடைவெளிக்கு மேலே உள்ள நிலமானது தனது எடையையும் அதன் மேலே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் கணத்தையும் தாங்கமுடியாத நிலை வரும்போது, மேலடுக்கு நிலம் சரிந்து அடியில் உருவான இடைவெளியை நிரப்புகிறது. இதனால் புவிமேற்பரப்பில் பள்ளம் (அ) புதைகுழி உருவாகிறது. இந்நிகழ்ச்சி திடீரென்றும் படிப்படியாகவும் ஏற்படலாம்.

மேற்கூறப்பட்ட செயல்முறையானது, நிலத்தடிநீர் அரிப்பினாலும் ஏற்படலாம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதனால் உருவாகும் இடைவெளியினாலும் ஏற்படலாம்.
பெரும்பாலும் இக்குழிகள் உருவாகும் போது அதன் அடியில் உள்ள குகை (அ) இடைவெளி மேலே தெரியாது. ஆனால், பபுவா நியு கினியாவிலுள்ள மின்யே புதைகுழி (Minyé sinkhole), கென்டகியில் உள்ள செடார் புதைகுழி (Cedar Sink) போன்ற பெரிய குழிகளில் நிலத்தடி நீரோட்டம் புதைகுழிக்கு அடியில் கண்ணுக்கு புலப்படும் வகையில் அமைந்துள்ளது.
கார்பனேட் பாறைகளை அடிநிலப் பாறைகளாகக் கொண்ட இடங்களில் இப்புதைகுழிகள் பரவலாகக் காணப்படுகின்றன.

இக்குழிகள் மனிதச் செயல்பாடுகளால் கூட ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, இலூசியானா போன்ற இடங்களில் கனிமச் சுரங்கங்கள் இடிவதனால் குழிகள் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களில் நிலத்தடியில் உள்ள தண்ணீர்க் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைக் குழாய்கள் உடைவதனால் குழிகள் ஏற்படுகின்றன. நிலத்தடிநீரை அதிகமாக சுரண்டுவதனாலும், இயற்கையான ஆற்று நீரோட்டத்தை மாற்றுவதனாலும், தொழிற்சாலை நீர்தேக்கங்கள் கட்டுவதனாலும் மேற்பரப்பு நில அடுக்கு எடை மிகுந்து தாங்குவதற்கு அடிநிலப்பாறைகள் இல்லாததால் குழிகள் உருவாகலாம்.

நிகழும் இடங்கள்[தொகு]

புதைகுழிகள் பெரும்பாலும் கார்சுடு நிலப்பரப்புகளில் ஏற்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதைகுழி&oldid=3491416" இலிருந்து மீள்விக்கப்பட்டது