கிசன்கங்கா நீர் மின் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிசன்கங்கா நீர்மின் திட்டம் என்பது இந்திய அரசால் சம்மு காசுமீர் மாநிரத்தில் கட்டப்பட இருக்கும் நீர் மின் நிலையம் பற்றியது. இந்த திட்டத்தின் படி, ஜீலம் ஆற்றின் கிளை ஆறான ”கிசன்கங்கா”வின் குறுக்கே அணை கட்டப்பட்டு, இவ்வாற்று நீர் 'போனார் மத்மதி நல்லா' என்ற இன்னொரு கிளையாற்றிற்கு திருப்பி விடப்படும். இங்கு 330 மெகாவாட் மின்சாரம் உருவாக்கும் நீர் மின் நிலையம் கட்டப்படும். இதற்கான கட்டுமானப் பணி 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், இப்படி ஆற்று நீரை திருப்பி விட்டால் தங்களது நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் மேலும் இது 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தினை மீறும் செயல் என்றும் பாக்கித்தான் அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வழக்கு நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு 2011 இல் பாக்கித்தான் அரசால் எடுத்துச்செல்லப்பட்டது. இந்நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 2013ல் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி, இந்திய அரசு ஆற்று நீரை திருப்பிவிட்டுக்கொள்ளலாம், ஆனால் அணையின் கீழ் தங்கும் வண்டல் படிவுகளை அகற்ற 'கீழெடுக்கும்' (Drawdown) தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது. மேலும், 2013 டிசம்பர் மாதம் 20ம் தேதி பன்னாட்டு நடுவர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பின்படி, சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் கிசன்கங்கா நதிநீரை செலவுசெய்யாமல் நீரோட்டத்தை மட்டும் திருப்பிவிட்டு புனல்மின்சாரம் தயாரிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. அதோடு, இந்தியா, வினாடிக்கு 9 சதுரமீட்டர் நீரோட்டத்தை எப்போதும் விடவேண்டும். மேலும், கீழ் தங்கும் வண்டல் படிவுகளை அகற்ற 'கீழெடுக்கும்' (Drawdown) தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 19 மே 2018 அன்று கிசன்கங்கா நீர் மின் திட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Narendra Modi inaugurates Kishanganga hydropower project in Kashmir".