சக்கர நாற்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன மத்திய சக்கரம் பொருத்திய மின் கொள்கலன் ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி.

சக்கர நாற்காலி என்பது தானாக நடக்கும் திறனில் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத நொயாளிகளுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சக்கரங்கள் பொருத்தபட்ட நாற்காலியாகும். இதில் பயன்பாட்டிற்கேற்ப மனித ஆற்றலினால் இயங்குவன, மின்னாற்றலில் இயங்குவன என்று பலவகைகள் உள்ளன. மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலியில் இந்த நாற்காலியினை நகர்த்துவதற்கு ஏதுவாக கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

வரலாறு[தொகு]

சக்கர நாற்காலியானது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீன கல்வெட்டுகளிலும் கிரேக்க பூச்சாடி வேலைப்பாடுகளிலும் காணப்படுகிறது. கி.பி 525 ஆம் ஆண்டுதொட்டே சீனாவில் சக்கர நாற்காலிகள் மனிதர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்வதற்கான பயன்பாட்டில் இருந்ததை சீன ஓவியங்கள் மற்றும் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.

பின்வரும் காலங்களில் ஐரோப்பாவில் செருமனி மறுமலர்ச்சி காலத்தின் பொழுது சக்கர நாற்காலி உபயோகத்தில் இருந்ததை அறிய முடிகிறது. 1760 ஆம் ஆண்டில் குளியல் நாற்காலிகள் பயன்படுத்தபட்டு வந்துள்ளன.

1933இல் ஹாரி ஜென்னிங்க்ஸ் மற்றும் அவரது மாற்றுதிறனாளியான நண்பர் ஹெர்பெர்ட் எவெரெஸ்ட், ஆகிய இரு இயந்திர பொறியாளர்களால் முதல் எடைகுறைந்த உலோகத்தால் ஆன மடித்துவைக்ககூடிய சக்கர நாற்காலி வடிவமைக்கபட்டது. இவர்களில் எவெரெஸ்ட் என்பவர் ஒரு சுரங்க விபத்தில் முதுகில் ஏற்பட்ட காயத்தினால் நடக்கும் திறனை இழந்தவர். இவர்கள் தயாரித்த அந்த சக்கர நாற்காலிக்குச் சந்தையில் இருந்த வரவேற்பைக் கண்டறிந்து அவர்கள் தயாரித்த சக்கர நாற்காலியை விற்பனைக்காக சந்தைப்படுத்தினர். ஆகவே இவர்களே முதல் சக்கர நாற்காலி தயாரிப்பாளர்களானார்கள். இவர்களின் X - சட்டம் உடைய வடிவமைப்பு சக்கர நாற்காலிகள் இன்றும் உபயோகத்தில் உள்ளன, இருந்தபோதிலும் இந்த நாற்காலிகள் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் கொண்ட வடிவிலும் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன.

வகைகள்[தொகு]

ஒரு அடிப்படையான மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலியில் ஒரு உட்காரும் இருக்கையும், பாதங்களை வைக்க தண்டுகளும் மற்றும் நான்கு சக்கரங்களும் இருக்கும். இரண்டு சுழலும் வகையிலான சிறு சக்கரங்கள் முன்பக்கத்திலும் இரண்டு பெரிய சக்கரங்கள் பின் பக்கத்திலும் இணைக்கபட்டிருக்கும். இதில் பொதுவாக பின்பக்கத்தில் உள்ள பெரிய சக்கரத்தில் நாற்காலியை இயக்குவதற்காக உலோகம் அல்லது நெகிழியினால் செய்யபட்ட தோராயமாக முக்கால் அங்குலம் தடிமனுடைய வட்டவடிவ உலோக ஓர விளிம்புகள் இருக்கும். இந்த ஓர விளிம்புகள் சாதாரணமாக பின்பக்க சக்கரங்களை விட சற்று சிறிய அளவிலான விட்டமுடையதாக இருக்கும். பெரும்பாலான சக்கர நாற்காலிகள் இருக்கையின் பின்புறத்தில் இரண்டாவது நபரால் தள்ளுவதற்கான இரண்டு கைப்பிடிகள் இருக்கும்.

மற்ற வகை சக்கர நாற்காலிகள் இந்த அடிப்படை வடிவில் அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் இருக்கும். ஆனால் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப சுற்றி வளைக்கபட்ட இருக்கை மற்றும் தேவையான இருக்கை உயர அளவு மற்றும் இருக்கையின் சாய்வு கோணம், பாத ஓய்வு தண்டுகள், கால் ஓய்வு தண்டுகள் என பலவகையான தேவையான அதீத மாறுதல்களுடனும் இவை கிடைக்கிறன.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட மரத்திலான சக்கர நாற்காலி

மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலிகள் மடித்துவைக்கக்கூடிய மற்றும் மடிக்க முடியாத சக்கர நாற்காலிகள் என இரு முக்கிய வடிவமைப்புகளில் கிடைக்கிறன. தற்பொழுது சக்கர நாற்காலிகள் வின்னூர்திகள் செய்ய பயன்படும் மிக எடை குறைந்த அலுமினியம் போன்ற பொருளினால் செய்யப்பட்டு வெளிவருகின்றன. இவை மொத்தத்தில் எடை குறைவாகவும் இயக்கத்திற்கு இலகுவாகவும் இருக்கிறன. மேலும் சில சக்கர நாற்காலிகள் ஷாக் அப்ஸார்பர் எனப்படும் அதிர்ச்சி குறைப்பான்களுடனும் கிடைக்கிறன.

மேலும் சில வகைகளில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பாதுகப்பு பட்டைகள், சாய்வு கோணம் மாற்றிக்கொள்ளகூடிய இருக்கை வசதி, அதிகப்படியான கை கால் ஓய்வு தண்டுகள், பொருட்கள் தாங்கிச்செல்ல உதிரி கூடைகள் என பல்வேறு வகையான உதிரிபாகங்களுடன் செய்து கொடுக்கப்படுகிறது. அடிக்கடி இடமாற்றம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மடித்துவைக்கக்கூடிய நாற்காலிகளையே விரும்பி வாங்குகிறனர். மெக்கானம் வீல்ஸ் (MECANUM WHEEL) எனப்படும் எந்த திசையிலும் எளிதில் செல்லக்கூடிய சக்கரங்களுடன் கூடிய சக்கர நாற்காலிகளும் சந்தையில் கிடைக்கிறன.

1980இல் ஒரு கண்காட்சியில் நிழற்படமாக எடுக்கப்பட்ட சக்கர நாற்காலியில் மெக்கானம் வீல்ஸ் எனப்படும் எந்த திசையிலும் செலுத்தவல்ல வகையான சக்கரங்கள் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி.

மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலிகள்[தொகு]

மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி என்ற வகையை சேர்ந்த சக்கர நாற்காலிகளை நகர்த்த ஒரு உபயோகிப்பாளரின் ஆற்றலோ அல்லது இரண்டாவதாக ஒரு மனிதனின் ஆற்றலோ தேவைப்படுகிறது. இவ்வகை நாற்காலிகளில் பல மடித்து வேறு இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடியவையாகக்கூட உள்ளன.

இவ்வகை நாற்காலிகள் பெரும்பாலும் உபயோகிப்பாளராலேயே இயக்கபடுபவையாக இருகின்றன. இவற்றை தேவையான திசைகளில் திருப்ப இவற்றின் பின்புறமுள்ள பெரிய சக்கரங்கள் உதவுகின்றன. பொதுவாக அவை 20 முதல் 24 அங்குலம் (51-61 சென்டிமீட்டர்) வரி விட்டமுள்ளவையாகவும் பார்வைக்கு மிதிவண்டியின் சக்கரங்களைப்போலும் இருக்கும். இவற்றை உபயோகிப்பவர் இந்த சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பு பட்டைகளின் உதவியுடன் இயக்கமுடியும். இந்த இருப்பு பட்டைகள் இந்த சக்கரங்களின் அளவினை விட சற்று சிறியதாக இருக்கும்.

ஒரு மருத்துவ உதவியாளரின் உதவியினால் இயங்கும் வகையான சக்கர நாற்காலிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப அவைகளின் இருக்கையின் பின்பகுதியில் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் இவ்வகை நாற்காலிகள் மருத்துவமனைகளில் ஸ்ட்ரெச்சர் எனப்படும் மருத்துவ படுக்கைகள் போன்ற வசதிகள் இல்லாத சமயங்களிலோ அல்லது அவ்வகை வசதிகள் தேவைப்படாத இடங்களிலோ இந்த சக்கர நாற்காலிகள் பயன்படுகின்றன. மேலும் இவ்வகை நாற்காலிகள் வின்னூர்தி நிலையங்களிலும் காணமுடிகிறது. சில வின்னூர்தி நிலையங்களில் குறுகளான வாயிற்படியுள்ள வின்னூர்திகளின் வாசலுக்கேற்ப சிறியவகைகளும் இருக்கிறன.

விளையாட்டு போட்டிகளுக்கான வகை[தொகு]

நவீன பந்தய வகை சக்கர நாற்காலி

மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து, அஞ்சல் பந்து, வரிப்பந்தாட்டம், பந்தயம் மற்றும் ஆடல் போன்ற மாற்றுத்திறனுடைய தடகள மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சக்கர நாற்காலிகளானது வேகமாக இயங்கும்வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் இருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விளையாட்டுபோட்டிகளுக்கும் அவ்வற்றின் தேவைக்கேற்ப தனித்தன்மையுடன் சக்கர நாற்காலிகள் உருவக்கப்படுகிறன. இவை என்னாளும் பயன்படும் சக்கர நாற்காலிகளை விட வடிவிலும் செயல்பாட்டிலும் மிகவும் மாறுபட்டதாக இருக்கும். பொதுவாக இவை மடிக்ககூடிய வகையில் இருக்காது (உறுதிதன்மைக்காக). இவ்வகைகளில் சில மைய உயர்ச்சியுடன், விற்சாய்வு உள்ளனவாக இருக்கும். இந்த சிறப்பமைப்பானது இவ்வகை நாற்காலிகளுக்கு சிறந்த நிலைத்தன்மையை தருகிறன. மேலும் இவை மிக எடைகுறைவான நல்ல உறுதியுடனான பொருள்களினால் செய்யப்படுகிறன. பொதுவாக இவ்வகை விளையாட்டுகளில் உபயோகிக்கும் நாற்காலிகள் தினசரி உபயோகிப்பிற்குகந்ததல்ல. ஆனாலும் சில உபயோகிப்பாளர்கள் இவ்வகை நாற்காலிகளேயே தினசரி வாழ்விலும் உபயோகப்படுத்துகிறனர்.

யப்பானின், டோக்கியோவில் 2007ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கிடையே நடந்த உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி

நவீன விளையாட்டு உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கான பவர்சேர் ஃபுட்பால் எனப்படும் மின்னாற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி உபயோகிப்பாளர்களுக்கான கால்பந்தாட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. இது மட்டுமே இப்பொதைக்கு மின்னாற்றல் சக்கர நாற்காலி உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே கால்பந்தாட்ட போட்டியாகும். இது அகில உலக மின்னாற்றல் சக்கர நாற்காலி கால்பந்தாட்ட சம்மேளனம் The Federation Internationale de Powerchair Football Associations (FIPFA) என்ற அமைப்பினால் நடத்தப்படுகிறது. இது ஃப்ரான்ஸின் பாரிஸ் நகரை மையமாக கொண்டு இயங்கும் சம்மேளனம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கர_நாற்காலி&oldid=2755904" இலிருந்து மீள்விக்கப்பட்டது