செபலோட்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபலோட்டசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
செபலோட்டேசியீ
பேரினம்:
செபலோட்டசு

இனம்:
சி. போலிகுலாரிசு
இருசொற் பெயரீடு
செபலோட்டசு போலிகுலாரிசு
லாபில்.
Global range

செபலோட்டசு (Cephalotus) என்பது ஒரு பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். இத்தாவரம் 'செபலோட்டேசியீ' என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 'செபலோட்டசு போலிகுலோரிசு' என்ற ஒரு இனம் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இவை மேற்கு ஆஸ்திரேலியாவில், அல்பேனி என்ற நகரத்தின் சதுப்பு நிலப்பகுதியில் வளர்கிறது. எனவே இதனை 'அல்பேனிச் சாடிச்செடி' எனவும் அழைப்பார்கள். இச்செடிகள் இப்பகுதியில் காணப்படுவதை முதன்முதலில் 'ஜார்ஜ் சவுண்ட்' என்பவர் கண்டறிந்தார்.[1]

செபலோட்டசு என்றால் கிரேக்க மொழியில் 'தலையை உடையது' என்பது பொருளாகும்.[2] பூவின் அடிப்பகுதியில் தலைப்பகுதிகொண்ட மயிர்கள் போன்ற அமைப்பு உள்ளதனால் இத்தாவரம் இப்பெயர் பெற்றது.[3]

அமைப்பு[தொகு]

இது ஒரு பல பருவச் செடியாகும். இச்செடி 5 முதல் 8 செ. மீ. உயரம் மட்டுமே வளரக்கூடிய மிகச் சிறிய செடியாகும். இதன் தண்டுப்பகுதி தரையில் ஊர்ந்து செல்லும் மட்டத்தண்டு கிழங்கு வகையைச் சேர்ந்தது. இலைகள் தலையை ஒட்டிப் படர்ந்திருக்கும். இவற்றில் இரண்டு வகையான இலைகள் உள்ளன. உள்வட்டத்தில் பூவின் இதழடுக்கு போல் 4 முதல் 6 இலைகள் உள்ளன. இது நீள்முட்டை வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த இலைகள் சாதாரண இலைகளைப்போல் சூரிய ஒளியின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன. இலைகளை ஒட்டி வெளிப்புறத்தில் இலையிலிருந்து மாறுபட்டு சாடியாகவோ, கூஜாவாகவோ இலைகள் உள்ளன. இந்தச் சாடிகள் 2.5 முதல் 5 செ. மீ நீளம் கொண்டவை. இது பச்சை, சிவப்பு கலந்த நீலம், வெள்ளை ஆகிய நிறத்துடன் அமைந்துள்ளன. சாடியின் வாய்ப்பகுதி குழல் போன்று இருக்கும். இதன் மேல் பகுதியில் மூடி அமைந்துள்ளது. இதில் நரப்புகள் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். இம்மூடி கீழ்நோக்கி இயங்கும் வகையில் அமைந்துள்ளது. குடுவையின் உள் பகுதியில் தண்ணீர் போன்ற திரவம் காணப்படும்.

Cephalotus follicularis: a young plant of about 2–3 years, grown in cultivation

குடுவையின் வாய் விளிப்புக்குக் கீழே இளம் பச்சையுடன் கூடிய சிவப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் இனிப்பான வாசனையுடைய தேன் சுரப்பிகள் உள்ளன. இதற்கடுத்த பகுதி வழுவழுப்பாக இருக்கும். இதை வழுக்குப் பகுதி, சறுக்கும்பகுதி என அழைப்பர். ஜாடியின் உள் பகுதியில் சுரப்பிகள் பளபளக்கும் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும். இவை கீழ்நோக்கி வளைந்தும், மிகவும் நீண்டு, அடர்த்தியாகவும், மிகமிக மிருதுவாகவும் இருக்கும். இவை பூச்சிகளை செரிக்கக்கூடிய செரிப்பு நீரைச் சுரக்கின்றன. இது போன்ற சுரப்பி மூடிகள் குடுவையின் அடிப்பகுதியில் காணப்படுவதில்லை.

உணவூட்டம்[தொகு]

Plate 3119, Curtis's Botanical Magazine, details by Ferdinand Bauer

சில சமயங்களில் பறக்கும் பூச்சிகள்,குறிப்பாக எறும்புகள் குடுவையின் அழகினால் கவரப்பட்டு, குடுவையின் வாய்ப்புறத்திற்குச் செல்லும். உள்பகுதியில் உள்ள தேன் சுரப்பிகள் மின்னுவதால் தேன் என எண்ணி உள்ளே ஊர்ந்து செல்லும். அங்கே உள்ள வழுக்கும் பகுதியில் இதன் கால் பட்டவுடன் பூச்சி வழுக்கி கீழே விழுந்துவிடும்.பூச்சி மேலே வர முயற்சிக்கும்போது மேலே உள்ள மயிர்கள் தடுக்கின்றன. பிறகு பூச்சிகள் செரிக்கப்படுகின்றன.

இச்செடியின் மையப்பகுதியில் நீண்ட 60 செ.மீ நீளமுடைய காம்பு உள்ளது. இதில் மிகச்சிறிய வெள்ளைப்பூக்கள் உள்ளன. இது பார்ப்பதற்கு கவர்ச்சியாக உள்ளதால் இவற்றை செடிகள் வளர்க்கக்கூடிய கண்ணாடி வீடுகளில் வளர்க்கிறார்கள்.

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு[தொகு]

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

உசாத்துணை[தொகு]

ஏற்காடு இளங்கோ. ';அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Vallance, T. G.; Moore, D. T.; Groves, E. W. (2001). Nature's Investigator: The Diary of Robert Brown in Australia, 1801–1805. Canberra: Australian Biological Resources Study. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-642-56817-0. 
  2. William Jackson Hooker (1831). "Cephalotus follicularis. Follicled Cephalotus". Curtis's Botanical Magazine (Samuel Curtis) 58: Pl. 3118 & 3119. http://en.wikisource.org/wiki/Curtis%27s_Botanical_Magazine/Volume_58/3118. 
  3. செப்பலோட்டசு (2004). அதிசயத் தாவரங்கள். அறிவியல் வெளியீடு. பக். 22- 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-87536-09-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபலோட்டசு&oldid=3853604" இலிருந்து மீள்விக்கப்பட்டது