இறைச்சி (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகப்பொருள் பாகுபாடு புணர்ச்சி, ஆற்றியிருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஆண் பெண் உறவுகளை (உரிப்பொருளை) மையமாகக் கொண்டது. இதற்கு முதற்பொருளும், கருப்பொருளும் துணையாக அமையும். இவற்றை ஐந்திணை என்பர்.

இவற்றில் இறைச்சி என்பது கருப்பொருள். கரு வளரும் பொருள். இறைச்சி அழுகும் பொருள். கரு உயிரோட்டம் உள்ளது. இறைச்சி உயிரோட்டம் இல்லாதது. பாட்டில் சொல்லப்படும் கருப்பொருள்களிலிருந்து பாட்டால் சொல்லப்படும் பொருளை உய்த்துணர்ந்து கொள்வதை இலக்கண நூலார் இறைச்சி எனக் குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியத்தில் சில நூற்பாக்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. [1]

விளக்கம்[தொகு]

உட்பொருளைப் புறத்தே காட்டல்[தொகு]

  • இறைச்சியானது உரிப்பொருளைப் புறத்தே காட்டும். [2]

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கருங்காற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இறைக்கும் நாடனொடு நட்பே [3]

இந்தப் பாடலில் குறிஞ்சிப் பூவில் உள்ள தேன் இறைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தலைவியின் தேனைத் தலைவன் இறைத்தான் (கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல மொண்டுகொண்டான்) என்னும் புணர்தல் உரிப்பொருள் புறத்தே காட்டப்பட்டுள்ளது.

உள்ளக் கிடக்கை காட்டல்[தொகு]

  • இறைச்சியால் வேறு பொருளையும் உணர்ந்துகொள்ளலாம். [4]

ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்து
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் கொய்மார்
நின்றுகொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே. [5]

இந்தப் பாடலில் போரிட்டுக்கொள்ளும் இரண்டு யானைகள் மிதித்த வேங்கைமரம் இறைச்சிப் பொருளாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் வேங்கை மரத்தைத் தலைவி என்று கொண்டு காணவேண்டும். தலைவன் புணர்ச்சிக்காக அவளை மிதிக்கிறான். தாய் காப்புக்குள் வைத்து அவளை மிதிக்கிறாள். திருமணந்தான் இதற்குத் தீர்வு. முன்பு திருமணம் என்னும் வேங்கைப்பூவை மரத்தில் ஏறிப் பறிக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது இருவரும் மிதிப்பதால் அது நிலத்தில் நின்றுகொண்டே பறிக்கும் எளிய நிலைக்கு வந்துவிட்டது. தலைவன், தலைவி, தாய் மூவரும் திருமணத்தை நாடுகின்றனர். இந்த உள்ளக் கிடக்கை இதன் இறைச்சிப் பொருளால் கொள்ளக் கிடக்கின்றது.

அன்பின்மையில் அன்பைக் காட்டல்[தொகு]

  • இறைச்சிப்பொருளால் அன்பின்மையோடு அன்புடைமையையும் இணைத்துச் சொல்லமுடியும். [6]

அடிதாங்கும் அளவின்றி அழல் அன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாய் காடு என்றார் அக் காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரை
மிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே [7]

இந்தப் பாட்டில் தீப் போல் பொடி சுடும் காடு, குட்டியானை, ஆண்யானை, பெண்யானை, கலங்கர் நீர் ஆகியவை இறைச்சிப் பொருள்கள். காடு அழல் அன்ன வெம்மை என்றும், அக்காட்டில் குட்டியானை கலக்கிக் கொஞ்சமாக இருக்கும் நீரை, பொண்யானைக்கு முதலில் ஊட்டிவிட்டு ஆண்யானை பின்னர் உண்ணும் என்றும் கூறப்பட்டிருப்பது இறைச்சிப் பொருள் விளக்கங்கள். தலைவன் ஆண்யானை போலத் தன்னைக் காப்பாற்றுவான் என்று சொல்லித், தலைவி தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ள விரும்புகிறாள். பொடி சுடும் காடு என்பதில் தலைவன் தலைவியை அழைத்துச் செல்ல விரும்பாத அன்பின்மை காணப்படுகிறது. கலங்கல் நீர் என்பதும் அன்பின்மை. எனினும் ஆண்யானை ஊட்டுவதைக் குறிப்பிடும்போது அன்புடைமை வெளிப்படுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் பொருளியல் நூற்பா 33, 34, 35
  2. இறைச்சிதானே உரிப் புறத்ததுவே. தொல்காப்பியம் பொருளியல் 33
  3. குறுந்தொகை 3
  4. இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே
    திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே. தொல்காப்பியம் பொருளியல் 34
  5. குறுந்தொகை 208
  6. அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்
    வன்புறை ஆகும் வருந்திய பொழுதே. தொல்காப்பியம் பொருளியல் 35
  7. கலித்தொகை 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைச்சி_(இலக்கணம்)&oldid=3643337" இலிருந்து மீள்விக்கப்பட்டது