அபுதாபி (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுதாபி
أبو ظبي
நகரம்
அபுதாபி நகரம்
Abu Dhabi's skyline from Marina Mall
Abu Dhabi's skyline from Marina Mall
அபுதாபி-இன் கொடி
கொடி
அமீரகம்அபுதாபி அமீரகம்
அரசு
 • ஷேக்முகமது பின் சயீது அல் நகியான்
பரப்பளவு
 • மொத்தம்67,340 km2 (26,000 sq mi)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்1, 463, 491
 • அடர்த்தி293.94/km2 (761.3/sq mi)

அபுதாபி (Abu Dhabi, அரபு மொழி: أبو ظبيAbū Ẓabī, அபூ ழபீ) ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை) பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007) மக்கள் வாழ்கிறார்கள்.[1]

இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன.

நாட்டின் தலைநகரம் என்ற வகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல், கைத்தொழில் நடவடிக்கைகளினதும், பண்பாடு மற்றும் வணிக நடவடிக்கைகளினதும் மையமாக விளங்குகிறது. அபுதாபி நகரம் மட்டும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15% ஐ உருவாக்குகின்றது. நாட்டின் முக்கியமான நிதி அமைபான மத்திய வங்கியும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது.

இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

கிமு மூன்றாவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியிலேயே அபுதாபியின் சில பகுதிகளில் குடியேற்றங்கள் இருந்திருக்கின்றன. அக்காலத்தில் இப் பகுதிகளுக்கேயுரிய நாடோடி மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் இருந்ததாகத் தெரிகிறது. தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனி யாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அபுதாபியின் பொருளாதாரம், ஒட்டக வளர்ப்பு, அல் எயின், லீவா ஆகிய பாலைவனச் சோலைகளில் உற்பத்தியான பேரீச்சு, மரக்கறி வகைகள், அபுதாபி நகரக் கரையோரத்துக்கு அப்பால் இடம்பெற்ற மீன்பிடித்தல், முத்துக் குளிப்பு என்பவற்றில் தங்கியிருந்தது. அக்காலத்தில் அபுதாபி நகரத்தில் இருந்த வீடுகள் ஈச்சமர ஓலைலளால் அமைக்கப்பட்ட "பராஸ்தி"என்னும் வகையைச் சார்ந்தவையாகும். வசதி படைத்தவர்கள் மண்ணால் கட்டப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், உலகில் செயற்கை முத்து உற்பத்தித் தொழில் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அபுதாபியின் முத்துக்குளிப்பு நெருக்கடிக்குள்ளானது. அப்போது முத்துக்களின் ஏற்றுமதியே அபுதாபி மக்களின் பணவருவாய்க்கான முக்கிய மூலமாக இருந்தது. 1939 ஆம் ஆண்டில் அக்கால அபுதாபியின் ஆட்சியாளரான சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலிய சலுகையை வழங்கினார். 1958 ஆம் ஆண்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் பெட்ரோலிய வருமானம் அபுதாபியின் வளர்ச்சியில் மிகக் குறைந்த தாக்கத்தையே கொண்டிருந்தது. சில குறைந்த உயரம் கொண்ட காங்கிறீட்டுக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. தளமிடப்பட்ட முதலாவது சாலை 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெற்றோலிய வருமானம் நீடிக்குமா என்ற ஐயப்பாடு காரணமாக சேக் சக்புத் எச்சரிக்கையாக நடந்து கொள்ள விரும்பினார். வருமானத்தை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்யாமல் சேமிக்க எண்ணினார். அவரது சகோதரரான சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலியத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அபுதாபியை மாற்ற வல்லது என்னும் கருத்தைக் கொண்டிருந்தார். நகியான் குடும்பத்தினர் சேக் சக்புத்துக்குப் பதிலாக சேக் சாயித் ஆட்சியாளராகி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினர். 1966 ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரித்தானியரின் துணையுடன், சேக் சயத் ஆட்சியாளரானார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introducing Abu Dhabi". Archived from the original on 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுதாபி_(நகரம்)&oldid=3611337" இலிருந்து மீள்விக்கப்பட்டது