பாரடைசுப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரடைசுப் பூங்காவின் இயல்புகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள தாஜ்மகாலைச் சுற்றியுள்ள பூங்கா.

பாரடைசுப் பூங்கா என்பது ஒரு வகைப் பூங்காவைக் குறிக்கும். தொடக்கத்தில் இவ்வகைப் பூங்கா பாரடைசு என்னும் சொல்லாலேயே வழங்கப்பட்டு வந்தது. இதன் பொருள் "மதிலால் சூழப்பட்ட பூங்கா" என்பதாகும். மெடியன் அல்லது பழம் பாரசீக மொழியில் இருந்து பெறப்பட்ட இச் சொல், "பைரி", "டிஸ்"என்னும் இரு சொற்களாலானது. "பைரி" என்ற சொல் "சூழ்" என்ற பொருளுடையது. "டிஸ்" என்பதற்கு சுவர், செங்கல், வடிவம் போன்ற பொருட்கள் உண்டு.

தன்மையும், தளக் கோலமும்[தொகு]

இவ்வகைப் பூங்காவின் சில இயல்புகள் அது தோன்றிய வரண்ட அல்லது ஓரளவு வரண்ட சூழலில் இருந்து பெறப்பட்டவை. இதன் மிக அடிப்படையான அம்சம் சுற்றிலும் சுவர் இருப்பதாகும். இது தானாகக் காடாக வளருன் இயற்கையிலிருந்து, நட்டு நீரூற்றி வளர்க்கும் பசுமையைப் பிரித்து வைக்கிறது. மிகப் பொதுவானதும், இலகுவானதுவான வடிவம் செவ்வக வடிவமாகும். இதனால் இவ்வடிவமே இவ்வகைப் பூங்காக்களுக்குரிய பொதுவான வடிவமாக உள்ளது. இவற்றுக்குரிய இன்னொரு பொதுவான அம்சம் நீரின் பயன்பாடு ஆகும். வாய்க்கால்கள், தடாகங்கள், சில சமயங்களில் நீரூற்றுக்கள், மிக அரிதாக அருவிகள் போன்ற பல வடிவங்களில் நீர் இவ்வகைப் பூங்காக்களில் இடம் பெறுகின்றது.

இவற்றிலிருந்து உருவான பூங்கா வகைகள்[தொகு]

பாரசீகப் பாரடைசுப் பூங்காக்கள் பல வகைப் பூங்காக்களைத் தோற்றுவித்த அடிப்படையான பூங்கா வகைகளுள் ஒன்று. இசுலாமிய மரபு சார்ந்த பூங்கா வகைகளுட் பலவற்றுக்கு இதுவே அடிப்படை. பின்னர் ஐரோப்பாவில் தோன்றிய பூங்கா வகைகள் பலவும் கூட பாரடைசுப் பூங்காவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரடைசுப்_பூங்கா&oldid=1381497" இலிருந்து மீள்விக்கப்பட்டது