ஈல-திராவிட மொழிக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈல-திராவிடம்
(சர்ச்சைக்கு உரியது)
புவியியல்
பரம்பல்:
தெற்கு ஆசியா
மொழி வகைப்பாடு: ஈல-திராவிடம்
துணைப்பிரிவு:

ஈல-திராவிட மொழிக் குடும்பம், என்பது ஒரு கருதுகோள் அடிப்படையிலான ஒரு மொழிக் குடும்பம் ஆகும். இது, பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பத்தையும், தற்போதைய தென்மேற்கு ஈரானில் ஒரு காலத்தில் இருந்து மறைந்துவிட்ட ஈலம் மொழியையும் உள்ளடக்கும் மொழிக் குடும்பம். மொழியியலாளரான டேவிட் மக்-அல்பின் என்பவரே இக் கருதுகோளை ஆதரிப்பவர்களில் முதன்மையானவர். இக் கருதுகோளை முன்மொழிந்தவர்கள் சிந்துவெளி நாகரிகக் காலத்தில் பேசப்பட்டதும், இன்று அழிந்துவிட்டதுமான அரப்பா மொழியும் கூட இக்குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

உறுப்பு மொழிகள்[தொகு]

முன்மொழியப்பட்ட ஈல-திராவிட மொழிக்குடும்பத்தில் திராவிட மொழிகளும், ஈல மொழியும் அடங்குகின்றன. இவற்றுடன் அரப்பா மொழியும் அடங்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

திராவிட மொழிகள்[தொகு]

இது ஒரு தென்னிந்திய மொழியாகும். இம்மொழிகளைப் பேசுவோரில் மிகப் பெரும்பான்மையினர் இந்தியாவின் தென் கோடியிலுள்ள நான்கு மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர். வழக்கிலுள்ள திராவிட மொழிகளில் பெரும்பாலானவை இம் மாநிலங்களிலேயே பேசப்படுகின்றன. இவை தவிர இந்தியாவின் பிற பாகங்களிலும், பாகிசுத்தான், நேபாளம், ஈரான் ஆகிய நாடுகளிலும் சில திராவிட மொழிகள் உள்ளன. இவை இக் குடும்பத்தின் மிகச் சிறிய மொழிகள். இக் குடும்பத்தில் மொத்தமாக 70க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் முக்கியமான திருந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை. அண்மைக் காலங்களில் புலப் பெயர்வுகளினால் ஏற்பட்ட பரம்பல் தவிர மிகப் பெரும்பாலான திராவிட மொழி பேசும் மக்கள் தென்னிந்தியாவிலும், அதை அண்டிய இலங்கையின் பகுதிகளிலுமே காணப்படுகின்றனர்.

ஈலம் மொழி[தொகு]

இது பழைய காலத்தில் பாரசீகப் பகுதிகளில் பேசப்பட்டு இன்று வழக்கொழிந்துவிட்ட ஒரு மொழி. கிமு ஆறாம் நூற்றாண்டு முதல் கிமு நான்காம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் அப் பகுதியில் இது முதன்மை மொழியாக விளங்கியது. இம்மொழியிலான மிகப் பிந்திய ஆவணம் எழுதப்பட்ட காலம் பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தைக் கைப்பற்றிய காலத்துடன் பொருந்தி வருகிறது. இம்மொழி கிமு நான்காம் நூண்றாண்டின் இறுதிப் பகுதியில் வழக்கொழிந்ததாகக் கருதப்படுகிறது. ஈல மொழி அதன் அயல் மொழிகளுடன் தொடர்பற்ற ஒரு தனி மொழியாகக் காணப்படுகிறது. எனினும், பல்வேறு மொழிகளுடனும் இதற்கு உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல்வேறு மொழிக் குடும்பங்களில் இதை அடக்குவது குறித்த முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆய்வுகள்[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், திராவிட மொழிகள் பற்றி மிக முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்ட கால்டுவெல், திராவிட மொழிகளை பெகுசுத்துன் கல்வெட்டில் கண்ட ஈல மொழியுடன் ஒப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளை சித்திய மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ததின் ஒரு பகுதியாகவே ஈல மொழியுடனான ஒப்பீடும் இடம்பெற்றது. அடுத்ததாக "போர்க்" என்பவர் ஈல மொழியை, இந்தியாவுக்கு வெளியே பாகிசுத்தானில் உள்ள பிராகுயி என்னும் திராவிட மொழியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். எனினும் இவர்கள் திராவிட மொழிகளையும், ஈல மொழியையும் ஒரே குடும்பத்துள் அடக்கி முன்மொழியவில்லை.

ஈல மொழியையும், திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த மொழியியலாளர் டேவிட் மக்-அல்பின் எழுதிய "முதனிலை ஈல-திராவிடத்தை நோக்கி" (Toward Proto-Elamo-Dravidian) என்னும் கட்டுரை 1974 ஆம் ஆண்டில், வெளியானது. இக் கட்டுரையில் அவர் ஈல-திராவிட மொழிக்குடும்பம் பற்றிய அவரது முன்மொழிவை முன்வைத்தார். பின்னர், 1975 ஆம் ஆண்டில், "ஈலமும் திராவிடமும்: மேலும் தொடர்பு குறித்த சான்றுகள்" என்னும் தலைப்பில் இன்னொரு கட்டுரையையும் வெளியிட்டார். இவரது ஆய்வுகள், இந்தக் கோட்பாட்டுக்கு ஒரு நவீன வழிமுறைகளுக்கு ஏற்ற வடிவம் கொடுத்தது எனலாம். மக்-அல்பின், பல்வேறு கட்டங்களிலும் காணப்பட்ட ஈல மொழியின் பொது அம்சங்களையும், மீளுருவாக்கப்பட்ட முதனிலைத் திராவிட மொழியின் முறைகளையும் எடுத்துக்காட்டி அவற்றை விளக்கினார். இவர் தனது ஆய்வுகளில், ஈல மொழி, திராவிட மொழிகள் என்பவற்றுக்கு இடையிலான உருபனியல் ஒற்றுமைகளை முதன்மையாக எடுத்துக் காட்டினார். இது தவிரப் பல ஒலியனியல் ஒப்புமைகளும், சொல் ஒற்றுமைகளும் எடுத்துக் காட்டப்பட்டன.

ஆதரவும் எதிர்ப்பும்[தொகு]

மக்-அல்பின்னின் முன்மொழிவைப் பல ஆய்வாளர்கள், முக்கியமாக அண்மைக் கிழக்குப் பகுதியின் பண்டைய மொழிகள் தொடர்பான வல்லுனர்கள், ஆதரித்தனர். இதற்கு வலுவான எதிர்ப்பும் இருந்தது. சில ஆய்வாளர்கள், மக்-அல்பினின் சான்றுகள் பொதுவான ஒப்பீட்டு நோக்கில் ஆர்வமூட்டக் கூடியவை எனினும், தனியான ஈல-திராவிட மொழிக் குடும்பம் ஒன்றை உருவாக்குவதற்குப் போதுமானவை அல்ல என்கின்றனர். இதிலும் கூடிய வலுவான சான்றுகளை ஈல மொழிக்கும், வேறு மொழிகளுக்கும் இடையிலான தொடர்புகளுக்கும் எடுத்துக் காட்ட முடியும் என்பது அவர்கள் கருத்து. வாக்லாவ் பிளாசெக் என்பவர், ஈல மொழிக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே, மக்-அல்பினால் எடுத்துக்காட்டப்பட்ட உருபனியல் தொடர்புகளை மறுக்காத போதும், இரு மொழிகளுக்கும் இடையிலான சொல் ஒற்றுமைகள் நம்பத்தக்கதாக இல்லை என்றார்.