ஓக்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடு ஆப்பிரிக்காவில் காபோன் அமைந்திருக்கும் இடம்.
இயற்கை அணு உலைகள் இருந்த இடத்தின் புவியியல் அமைப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம். படத்தில் எண்கள் குறிப்பிடும் பகுதிகள்-.
(1) அணு உலைகள் இருந்த இடம்.
(2) புரைகள் நிறைந்த பொரபொரப்பான பாறை (அல்லதை புழைப் பாறை)
(3) யுரேனியம் படலம்,
(4) கருங்கல் பாறை

ஓக்லோ என்னும் இடமானது, நடு ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் நாட்டில், ஓ-ஓகூயே (Haut-Ogooué ) என்னும் மாநிலத்தில் உள்ள பிரான்சிவில் (Franceville) என்னும் ஊரில் உள்ளது. இவ்விடத்தின் தனிச் சிறப்பு எனவென்றால், மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் (தொடரியக்கமாக அணுக்கரு பிளப்பு நிகழ்ந்து) தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று செப்டம்பர் 1972ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர் [1]. பெரு வியப்பூட்டும் இந்நிகழ்வு நடந்த காலத்தில் நில உலகில் உள்ள தரைநிலப் பகுதிகள் யாவும் பல்வேறு கண்டங்களாகப் பிரியாமல் ஒன்றாக இருந்தது (பார்க்க: ஒருநிலக் கொள்கை). ஏறத்தாழ 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த அணு உலை இயங்குவதற்கு ஆக்சிசன் தேவைப்பட்டிருக்கும் என்றும், அக்காலத்திற்கு சற்று முன்தான் (ஏறத்தாழ 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகில் முதன் முதலாக ஆக்சிசன் வளிமம் வெளியிடும் உயிரிகள் தோன்றியிருந்தன என்றும் அறிகிறார்கள். இவ்வுயிரிகள் ஒளிச்சேர்க்கை வழி ஆக்சிசனை வெளிவிட்டன.

வரலாறு[தொகு]

பியர்லாத்தே (Pierrelatte) என்னும் இடத்தில் அமைந்துள்ள பிரான்சிய அணு ஆற்றல் நிறுவனம் ஜூன் 7 1972இல், யுரேனிய ஓரிடத்தான்களின் விகிதத்தில் (U235/U238) சிறு வழக்கமாறுமாடு ஒன்றைக் கண்டனர் [2]. U238 ஓரிடத்தானை ஒப்பிடு பொழுது U235 என்னும் யுரேனிய ஓரிடத்தானின் அளவு விகிதம் 0.7202+/- 0.0010 % இருப்பதற்கு மாறாக 0.7171 % ஆகக் குறைந்து இருந்தது. இதற்கான சோதனைப் பொருள் ஓக்லோ என்னும் இடத்தில் இருந்து வந்ததாகக் கண்டறிந்தனர். U235 ஓரிடத்தானின் அளவு இதைவிட மிகக் குறைந்த அளவான 0.440 % ஆக சில இடங்களில் இருப்பதையும் பின்னர் கண்டனர். இப்படி U235 குறைவது தொடர்-விளைவாக அணுபிளப்பு நிகழும் அணு உலை இருந்தால் நிகழும் ஒன்றாகும். U235 என்பது எளிதாக அணுக்கரு பிளப்புக்குட்பட்டு தொடர்-விளைவாக அணுபிளப்புக்கு வழிதரும் ஓர் ஓரிடத்தான். எனவே அதன் அளவு இப்படி வேறு எங்கும் இல்லாத அளவு குறைந்து இருப்பது அணு உலை இயங்கியதற்கு வலுவான சான்றாக உள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. P. K. Kuroda, The Origin of the Chemical Elements and the Oklo Phenomenon, Springer Verlag, 1982
  2. H. Bouzingues, RJ.M. Boyer, C. Seyve and P. Teuilieres, “The Oklo Phenomeneon”, IAEA, Vienna, 1975, p. 237

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்லோ&oldid=3298611" இலிருந்து மீள்விக்கப்பட்டது